ஈழவர் ஜனநாயக முன்னணி சஜித்துக்கு ஆதரவு – செயலாளர் தெரிவிப்பு
ஈழவர் ஜனநாயக முன்னணி ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாதாக கட்சியின் செயலாளர் அருளப்பு இராஜநாயகம் தெரிவித்தார்.
இன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாக நாங்கள் மக்கள் மத்தியிலே சென்று எமது கொள்கைகளை வெளிப்படையாக விளங்கப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதும் எமது மக்களின் இன்றைய பொருளாதார கஷ்டங்களையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் முன்வைத்தும், மிகவும் மோசமான நிலையில் காணப்படும் அரச நிறுவனங்கள், ஊழல், லஞ்சம் போதைவஸ்து பாவனைகள் போன்றவற்றையும் நிறுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இவற்றை நிறுத்துவதற்கு நாம் யாரை இம்முறை ஜனாதிபதி தேர்தலிலே ஆதரிப்பது என்று முடிவினை எடுக்க வேண்டும்.
அந்த வகையிலே தேசிய ரீதியில் பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒருவர்தான் இம்முறை ஜனாதிபதியாக வருவார்.
அவ்வாறான நிலையிலே அவ் வேட்பாளர்களிடம் யார் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கின்றரோ அவருக்கு எமது ஆதரவை வழங்கமுடியும்
இவ்வாறான நிலையிலே எமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை இம்முறை ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடும் சஜித் பிரேமதாசாவிடம் முன்வைத்திருந்தோம். இக்கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்து இவற்றை அமுல்படுத்துவதற்கு தங்களால் இயன்ற முயற்சியினை செய்வதாக எமக்கு கூறியிருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் இம்முறை ஈழவர் ஜனநாயக முன்னணி ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குகின்றது என தெரிவித்தார்.











