அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (14) பெண் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த பெண் சம்பவதினமான நேற்று ஆற்றின் கரையில் இருந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஆற்று நீரில் இருந்து வெளியேறிய முதலை, குறித்த பெண்ணை இழுத்துக் கொண்டு சென்றுள்ளதையடுத்து அவர் காணாமல் போயுள்ளார்.
அவரை கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளதுடன் காரைதீவு மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவை மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.