உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய கோதுமை மாவு, மைதா மாவு என்று எதுவும் இல்லையா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சப்பாத்தி செய்யலாம். இந்த ஜவ்வரிசி சப்பாத்தி சுவையாக இருப்பது மட்டுமின்றி, மெதுமையாகவும் இருக்கும். மேலும் இந்த சப்பாத்தியை செய்தால் வழக்கமாக 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு வெறும் தேங்காய் சட்னி இருந்தாலே போதும்.
ஜவ்வரிசி சப்பாத்திக்கு தேவையான பொருட்கள் : மாவு ஜவ்வரிசி – 1 கப், உருளைக்கிழங்கு – 2,உப்பு – சுவைக்கேற்ப , தண்ணீர் – தேவையான அளவு ,எண்ணெய்/நெய் – தேவையான அளவு.
செய்முறை:
* முதலில் ஒரு கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து, ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த ஜவ்வரிசியை போட்டு, நன்கு மென்மையாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு பொடியாக்கிய ஜவ்வரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்குகளை எடுத்து, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய உருளைக்கிழங்கை ஜவ்வரிசி மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி, முதலில் கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். பிறகு சிறிது நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் மென்மையான ஜவ்வரிசி சப்பாத்தி தயார்.