வார விடுமுறை நாட்களில் தான் வாய்க்கு ருசியாக சமைத்து அதை பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியிருந்தால், அதுவும் அந்த சிக்கனை கொண்டு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், பூண்டு மிளகு சிக்கன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் வறுவல் ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு பூண்டு மிளகு சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு மிளகு சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
சிக்கன் – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு…
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 3
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10-12 பல்
சின்ன வெங்காயம் – 6-7
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு 2-3 நிமிடம் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த கழுவிய சிக்கனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு, பின் 3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, நீர் ஓரளவு வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான பூண்டு மிளகு சிக்கன் வறுவல் தயார்.