மாவீரர் நாளை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நவம்பர் 27 இல் தேசிய நினைவெழுச்சி நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனின் கம்பர்மலையில் உள்ள பூர்வீக இல்லத்துக்கு முன்பாக இன்று பகல் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மேலும் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு, தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதிக்கு முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது இராணுவத்தின் 522 வது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாகவும் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இறுதியாக எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன இத்துயிலும் இல்லத்தில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.