உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் பன்னீர் செய்வீர்களா? பொதுவாக பன்னீர் வாங்கினால், சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், அதைக் கொண்டு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கடாய் பன்னீர் என்று செய்வோம். ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி பன்னீரை சமைப்பீர்கள்.
அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி என்ன வித்தியாசமான பன்னீர் ரெசிபி செய்வது என்று கேட்கலாம். பன்னீர் யக்னி செய்யலாம். பன்னீர் யக்னி என்பது ஒரு காஷ்மீர் ரெசிபி. இது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு பன்னீர் யக்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் யக்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்: வறுத்து பொடி செய்வதற்கு…
* மல்லி – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் – 4
* பட்டை – 1 துண்டு
* கிராம்பு – 3
* ஏலக்காய் – 2
அரைப்பதற்கு..
* நீரில் ஊற வைத்த முந்திரி – ௧௦
* தயிர் – 1/2 கப்
* பன்னீர் – 4 துண்டுகள்
கிரேவிக்கு…
* எண்ணெய் – 3 டீஸ்பூன்
* நெய் – 1 டீஸ்பூன்
* பன்னீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை குடைமிளகாய் – 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* சிவப்பு குடைமிளகாய் – 1 (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 1/2 டம்ளர்
* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, காஷ்மீரி வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் நீரில் ஊற வைத்த 10 முந்திரியை சேர்த்து, அத்துடன் 1/2 கப் தயிர் மற்றும் 4 பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம், பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாயை சேர்த்து வதக்கி, அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் அரைத்து வைத்துள்ள முந்திரி தயிர் கலவையை ஊற்றி கிளறி லேசாக கெட்டியானதும், அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதோடு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் பன்னீர் துண்டுகள் மற்றும் வெங்காயம், குடைமிளகாயை சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் யக்னி தயார்.