ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் எப்போதும் கீரைகளுக்கென்று தனியிடம் உள்ளது. கீரை வகைகளில் முருங்கைக்கீரை மிகவும் பிரபலமானது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கீரை உங்கள் உடலுக்கு போதுமான இரும்புச்சத்தை வழங்குவதுடன் வேறுசில நன்மைகளையும் அளிக்கிறது. ஆனால் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலான மக்கள் கீரைகளை கண்டாலே பயந்து ஓடுவதுதான். கீரைகளில் உள்ள நன்மைகளைப் பற்றி அறிந்திருந்தாலும் அதை சாப்பிட பெரும்பாலானோர் தயாராக இல்லை. இதற்கு நல்ல தீர்வு கீரையை சுவையாக சமைத்துக் கொடுப்பதுதான்.
கீரையை பல்வேறு வழிகளில் சுவையாக சமைக்கலாம், அதில் முக்கியமானது கீரை கடையல்தான். சாம்பார் வடிவில் இருக்கும் இது முருங்கைக்கீரையை சுவையாக உட்கொள்ள அனுமதிக்கிறது.
தேவையானப் பொருட்கள்:
– முருங்கைக்கீரை – 2 கப்
– துவரம் பருப்பு – அரை கப்
– பூண்டு – 10 பல்
– சோம்பு – ஒரு தேக்கரண்டி
– சீரகம் – 2 தேக்கரண்டி
– கடுகு – 1 ஸ்பூன்
– உளுந்து – அரை ஸ்பூன்
– சின்ன வெங்காயம் – 10 முதல் 20
– பச்சை மிளகாய் – 4
– மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
– பெருங்காயம் – 2 சிட்டிகை
– கறிவேப்பிலை – சிறிதளவு
– நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு
– தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
– துவரம் பருப்பை ஒன்றுக்கு இரண்டு முறை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல முருங்கைக்கீரையை நன்றாக கழுவி வைத்துகொள்ளவும்.
– ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
– அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்து கொள்ளலாம்.
– பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்த்து கொள்ளலாம். முருங்கை கீரை எண்ணையில் சேர்ந்து வேகும் வரை கிளற வேண்டும். கீரை பாதி வேகும்வரை வதக்கவும்.
– பின்னர் இதில் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 5 நிமிடம் கொதிக்க வைத்தவுடன் பெருங்காயம் சேர்க்கவும். இப்போது அடுப்பை அணைத்து விடலாம்.
– 10 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டில் இந்த பருப்புபை கடைய வேண்டும். மையாக கடைய வேண்டாம். பாதி பாதி கீரை தெரியும் அளவிற்கு இருந்தால் நல்லது. இப்போது ஆரோக்கியமானமற்றும் சுவையான முருங்கை கீரை கடையல் தயார்…!