உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி சுடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி இட்லி செய்தால், ஒரு கட்டத்தில் இட்லியைக் கண்டே வீட்டில் உள்ளவர்கள் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமான இட்லிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அப்படி என்ன வித்தியாசமான இட்லியை செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.
உங்கள் வீட்டில் 1 கப் ஜவ்வரிசி இருந்தால் போதும், பஞ்சி போன்று மிருதுவான இட்லியை சுடலாம். இந்த ஜவ்வரிசி இட்லியுடன் கேரட்டை துருவி சேர்த்து செய்யும் போது சுவை பிரமாதமாக இருப்பதோடு, உடலுக்கும் நல்லது. இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு ஜவ்வரிசி கேரட் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி கேரட் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி – 1 கப்
* தண்ணீர் – 2 கப் (ஊற வைப்பதற்கு)
* வறுத்த ரவை – 3/4 கப்
* தயிர் – 3/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* கேரட் – 2 (துருவியது)
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: * முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை எடுத்து நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, அதில் 2 கப் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த ஊற வைத்த ஜவ்வரிசியுடன், ரவை, தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சேர்த்து, சிறிது உப்பு தூவி சிறிது நேரம் வதக்கி இறக்கி, அதை ஜவ்வரிசியுடன் சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அத்துடன் பேக்கிங் சோடா, துருவிய கேரட் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தயாரித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து 12-15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி கேரட் இட்லி தயார்.











