வவுனியாவில் மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தலைமையில் இன்று (13.12) இந்நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய மத்தியஸ்த தினமானது ஒவ்வொரு வருடமும் ஜீலை 18 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட மட்டங்களில் இந்நிகழ்வு கடந்த காலங்களில் அனுஸ்டிக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை மேலும் வலுவடையச் செய்யும் நோக்கில் நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாட்டங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்திற்கான இந்நிகழ்வின் போது மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள், அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெற்றி செயற்பாடுகள் தொடர்பிலும் அது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும், அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் எம்.சபர்ஜா, விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின் தவிசாளர்கள், மத்தியஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











