மட்டு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் குறோஸ் வாகனுத்துடன் விமானப்படை கோப்பிரல் உட்பட இருவரை வெடிகுண்டு பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பிரயாணித்த லான்ட்குரோஸ் வாகனத்தை பொலிஸார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்ததையடுத்து குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் வெடிபொருளுக்கான அமோனியா ஒரு கிலோ, ஜெல்கூறு ஒன்று, வெடிக்கான கயறு ஒருபந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டதையடுத்து கொடகவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர, மற்றும் களணி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததுடன் டபிள்யூபி; கே.ஜே, 6270 லான்ட்குரோஸ் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்தபகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.