நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள்.அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும்.இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் ‘நகச்சுற்று’ போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும்.எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.
புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.