உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் இதன் சிறப்பை புரிந்து கொள்ளாமல், தூக்கி எறிந்து விடுகிறோம்.
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கறிவேப்பிலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் விற்றமின் ஏ என்னும் பீட்டா கரோட்டீன், விற்றமின் பி, விற்றமின் சி, விற்றமின் டி, விற்றமின் ஈ, இரும்புச்சத்து, கல்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில்
அண்டி ஆக்சிடென்ட்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் ஆகியவையும் நிறைந்துள்ளன.
இதய ஆரோக்கியம்
உடலில் உள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை எரித்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும், இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிக்கும் ட்ரை கிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற, உடல் நல ஆபத்து பெருமளவு குறையும்.
உடல் பருமனை குறைக்க உதவும் சிறந்த இலை
கறிவேப்பிலை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். அதோடு இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் பருமனை குறைக்க ஜீரண சக்தி ந்ல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதனால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள், உணவில் தள்ளிக்க அதிகம் பயன்படுத்தும் இதனை தூக்கி எறியாமல் தவறாமல் சாப்பிட வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இந்த சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் என்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான செயல்முறையை மேம்படுத்தி, இன்சுலின் செயல்பாட்டை தூண்டி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சிறந்த டீடாக்ஸ் உணவு
கறிவேப்பிலைக்கு உடலில் உள்ள அழுக்குகளையும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு. மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்குவதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.
உடல் வீக்கத்தை போக்கும் ஆற்றல்
கறிவேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பலவேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக் கூடியவை. இதனால், கறிவேப்பிலை சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். ஆக்ஸிஜனேற்ற பண்புகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதனால், உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்த கறிவேப்பிலை உதவும் என்று பலவிதமான ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இரத்த சோகையை நீக்கும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை இரும்பு சத்து அதிகம் கொண்டது. மேலும் டீடாக்ஸ் தன்மையும் இதில் உள்ளது. இதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை
கறிவேப்பிலையை, வெறும் வயிற்றில், மென்று சாப்பிடுவதன் மூலம் அதிகபட்ச பலனை பெறலாம். தினசரி சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடுவதை வழக்கமாக கொள்வதும் பலன் தரும். கறிவேப்பிலை இலைகளை நன்றாக சுத்தம் செய்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனை தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் பானம் சிறத வெயிட்லாஸ் – டீடக்ஸ் பானமாக இருக்கும் . இது தவிர கறிவேப்பிலையை, அரைத்து எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கோடை காலத்திற்கேற்ற ஜில்லென்ற பானமாக அருந்தலாம்.