கியூபெக் மாகாணத்தில் தற்காலிக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் தஞ்சம் புகுந்தவர்களைச் சுரண்டியதுடன் மற்றும் ஒரு வேலை விபத்தை மறைக்க முயன்ற மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு விசாரணையின் மூலம் இந்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த மோசடி கியூபெக் மாகாணத்தின் தொழிலாளர் அமைச்சுக்கு எதிராக “இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடி” என்று அந்த அமைச்சு வர்ணித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் அரசுக்கு சுமார் $635,000 நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹெக்டர் ஹேர் ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் (56), ஹெக்டர் லோபஸ் ராமோஸ் (51), மற்றும் பியாட்ரிஸ் அட்ரியானா குரேரோ முனோஸ் (45) ஆகியோர் இக்குற்றம் தொடர்பான சந்தேக நபர்களாக உள்ளனர்.
ஆரம்பத்தில் கியூபெக் மற்றும் கனேடிய மத்திய அரசாங்கங்களுக்கு எதிராக $5,000 க்கும் அதிகமான மோசடி மற்றும் $5,000 க்கும் அதிகமான மோசடிகளை முன்னெடுப்பதற்கான, சதி செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.
ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் விசாரணை தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் தலைமையிலான இந்த மூவரும், வேலை அனுமதிப்பத்திரங்கள் இல்லாத தஞ்சம் புகுந்தவர்களை பணியமர்த்தும் பல தற்காலிக முகவர் நிலையங்களை நடத்தி வந்தனர்.
இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக, பணமாகவோ அல்லது அவர்கள் வழங்கிய போலி அடையாளங்களில் அச்சிடப்பட்ட காசோலைகள் மூலமாகவோ பணம் வழங்கப்பட்டது.
குற்ற ஒப்புதலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஊடக நிறுவனமொன்றின் விசாரணைக்குப் பின்னரே கியூபெக் மாகாணத்தின் தொழிலாளர் அமைச்சு இந்த தற்காலிக முகவர் நிலையங்கள் குறித்த விசாரணைகளைத் தொடங்கியது.
2018 இல் நடந்த விசாரணையின்போது, தஞ்சம் புகுந்த நபர் ஒருவர் மொன்றியல் மெட்ரோ நிலையத்தில் ஒரு மறைமுக தற்காலிக முகவர் வலையமைப்பால் பணியமர்த்தப்பட்டு, வேலை செய்யும் போது கடுமையாக காயமடைந்த சம்பவம் வெளிப்படுத்தப்பட்டது.
மொன்றியல் நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் சட்டவிரோதமாக வேலை செய்ய, அவருக்கு ஒரு முன்னாள் தொழிலாளியின் பெயர் மற்றும் சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டது.
அந்த வேலையைச் செய்யும் போது இறைச்சி வெட்டும் இயந்திரத்தால் அவரது கையின் மேற்பகுதி துண்டிக்கப்பட்டது.
அவசர அறுவை சிகிச்சையின் மூலம், அவரது தொடையில் இருந்து தோல் ஒட்டு (skin graft) எடுக்கப்பட்டு அவரது கை புனரமைக்கப்பட்டது.
எனினும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தனக்கு வலிப்பதாக 39 வயதான அந்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரை பணியமர்த்திய தற்காலிக முகவர் நிலையம், கியூபெக்கின் பணி சுகாதார மற்றும் பாதுகாப்பு சபைக்கு இந்த விபத்து குறித்து அறிவிக்கவில்லை.
இது தொடர்பான செய்தி வெளியாகியதன் பின்னர் அந்த சபை தலையிட்டு, நிறுவனத்தை அவருக்கு இழப்பீடு வழங்கும்படி கட்டாயப்படுத்திய பின்னரே இந்த விபத்து வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத் தக்கது.