கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள நிலத்தடி நீர் இருப்பு (Groundwater reserves) முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இணைந்து மாகாண அரசுக்கு இவ்விடயம் தொடர்பான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் நிலத்தடி நீர் இயற்கை முறையில் மீண்டும் ஊறி நிரம்பும் அளவை விட, மனிதப் பயன்பாட்டிற்காக உறிஞ்சப்படும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதே, இந்த அபாயகரமான சூழ்நிலைக்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரிக்கு (Pascale Déry) 12 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் 9 முன்னணி சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து, உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
கியூபெக் மாகாணமானது உலகின் புதுப்பிக்கத்தக்க நன்னீர் இருப்பில் சுமார் 3 சதவீதத்தைக் கொண்டுள்ள போதிலும், கடந்த காலங்களைப் போல நீர்வளத்தை ஒரு எல்லையற்ற வளமாக இனிமேலும் கருத முடியாது என அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, செயின்ட் லாரன்ஸ் பள்ளத்தாக்கு (Saint-Lawrence Valley) பகுதியில் அமைந்துள்ள நகரசபைகள் இந்த நீர் பற்றாக்குறை அச்சுறுத்தலை நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளமை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.











