ஆளும்கட்சியான லிபரல் கட்சியின் (Liberal Party) முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித் (Nathaniel Erskine-Smith), நாடாளுமன்றப் பதவியைத் துறக்கப் போவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தாம் கூட்டாட்சி அரசியலில் (Federal politics) இருந்து விலகப் போவதையும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஒரு தசாப்த கால மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையில், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு, அனுப்பிய விசேட மின்னஞ்சல் மூலம் நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
மாகாண அரசியலுக்கு (Provincial politics) மாறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அண்மையில் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது
கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாதனியேல் எர்ஸ்கைன்-ஸ்மித், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) அமைச்சரவையிலும், தற்போதைய பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முதலாவது அமைச்சரவையிலும் வீடமைப்புத் துறை அமைச்சராகப் (Housing Minister) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.











