தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்து கொண்ட போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நாமல் ராஜபக்ஷ இந்தக் கேள்வியை எழுப்பினார்.
இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதே, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்தியதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே பாடலை பாடியதற்காக கிளிநொச்சி இளைஞன் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தமக்கு சார்பான வகையில் சட்டத்தை பயன்படுத்த கூடாது என இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளார்.











