மொன்றியல் நகருக்கு வடக்கே அமைந்துள்ள லாவல் (Laval) பிராந்தியம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தொலைத்தொடர்பு மற்றும் கணினி அமைப்புகளின் முடக்கம் காரணமாக, பல சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மிக அவசரமான மருத்துவத் தேவை உள்ளவர்களைத் தவிர, ஏனைய பொதுமக்கள் லாவலில் உள்ள ‘சிட்டே-டி-லா-சாந்தே’ (Cité-de-la-Santé) மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு (Emergency Department) வருவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மிக முக்கியத் தகவல் தொடர்பு வடங்களில் (Fibre-optic cable) ஏற்பட்ட துண்டிப்பு காரணமாகவே இந்தத் தொழில்நுட்ப முடக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தொலைத்தொடர்பு முடக்கமானது, லாவல் நகரை மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள லானாடியர் (Lanaudière) மற்றும் லோரென்டியன்ஸ் (Laurentians) ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவச் சாலைகளைப் (Clinics) பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்களின் விபரங்களை கணினியில் பதிவு செய்ய முடியாமல் மருத்துவப் பணியாளர்கள் சிரமப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.











