காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையில் உணவுப் பற்றாக்குறையை ஒரு “அரசியல் கருவியாக” பயன்படுத்துவதாக, கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
காசாவை கட்டுப்படுத்தும் குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேலும் மேற்கொள்ளுமாறும் அவர் இஸ்ரேல் அரசை வலியுறுத்தினார்.
உணவை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அனிதா ஆனந்த் கூறினார்.
போர் நிறுத்தத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் இரு அரசுகள் தீர்வு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறிய அவர் கனடா தொடர்ந்து அந்த நிலைப்பாட்டைப் பேணும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காசா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக, உதவி அமைப்புகள் மற்றும் சர்வதேச குழுக்கள் கூறுகின்றன.
இருப்பினும், இஸ்ரேல் பஞ்ச ஆபத்து இருப்பதை முற்றிலும் மறுக்கிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவியை ஹமாஸ் இயக்கம் திருடுவதன் மூலம் பஞ்சத்தை ஏற்படுத்துகிறது என்று இஸ்ரேலியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையிலேயே, கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சருடைய கருத்து வெளியிடப்பட்டுள்ளது.






