தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இடம்பெற்றுள்ளது.
இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
நான்கு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட தொட்டி தண்ணீரில் நிரப்பப்பட்டிருந்தது. குறுகிய திறப்பு மற்றும் ஏணி வழியாக மட்டுமே இந்த நீர் தொட்டியை அணுகக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் பணி சீருடையில் இருந்ததாகவும், மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





