நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், குறித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த ஆயுதக்குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து பாப்பரசர் தெரிவித்திருப்பதாவது,
“கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் ஆயுதக்குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.






