ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகளும் பெற்றுக் கொள்ளலாம்
இன்னும் மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றது .
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்,மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன் ,கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், வடக்கு வலயத்திற்கு பொறுப்பான மேலதிக பதிவாளர் ,பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டாவளை பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன், தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடமாடும் சேவையில் பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.











