பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதன் போது, இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும், முக்கியமாக இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் பயன்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களைப் பாதுகாக்கவும், வலுவான மற்றும் ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கவும் ‘வளர்ந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லா இளைஞர்கள்’ என்ற இயக்கம் நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தெருவோர வியாபாரிகளுக்கான ‘பிரதமரின் சுவநிதி திட்டம்’ பெண்களின் பொருளாதார சுயாட்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மொத்த பயனாளிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள் என்றும், சுமார் 35 லட்சம் சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் இதன் மூலம் தங்கள் சுயதொழில்களைத் தொடங்கி மேம்படுத்தி புதிய வலிமையைப் பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனுடன், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும், நமது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வரலாற்றுத் தகவல்களை எளிதில் பெற உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சேர ராஜ்ஜியம் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதை நினைவுகூர்ந்த அவர், தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் அமர்நாத் யாத்திரை வரை வெற்றிகரமாகப் பரவியுள்ளதையும் பாராட்டினார்.











