இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 10 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது.
இரண்டு படகுகளில் தூத்துக்குடியில் இருந்து வந்த 22 மீனவர்களில் 10 மீனவர்களே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இரவு கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 22 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 22 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.





