கனடாவில் டொரொன்டோவிற்கு வடக்கே சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிங் (King) நகரில் இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை (22.10.2026) அதிகாலை 4:38 மணியளவில் ஜேன் வீதி (Jane Street) மற்றும் டேவிஸ் டிரைவ் டபிள்யூ (Davis Drive W.) பகுதிக்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதுடன், அதில் ஒரு வாகனம் தீப்பற்றி எரிவதாக அவசரக்கால சேவையினருக்குத் தகவல் கிடைத்தது.
இவ்விபத்தின் போது மோதிக்கொண்ட வாகனங்களில் ஒன்றான டெஸ்லா (Tesla) கார் தீப்பற்றி எரிந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் டெஸ்லா காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் பொலிஸ் அதிகாரி கரோலின் டி க்ளோட் (Const. Caroline de Kloet) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் இருவர் பரிசோதிக்கப்பட்ட போதிலும், ஒருவர் மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இப்பல வாகன மோதல் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், நெடுஞ்சாலை 400 மற்றும் கீல் வீதிக்கு இடையே உள்ள டேவிஸ் டிரைவ் பகுதியில் வீதிகள் மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்துத் தாமதம் ஏற்படக்கூடும் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.











