யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது இன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான 22 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 204 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 27 இழுவை படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன





