பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை தள்ளியிருக்கின்றது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் தழுவு அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.
போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.
மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.





