வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியும் பரிசில் வழங்கலும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வின்போது காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் 0க்கு 1 என்ற அடிப்படையில் துணவியூர் சென் நியூஸ்ரார் கழகத்தை வீழ்த்தி குலனையூர் கலைவாணி விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.
அதன்பின்னர் விருந்தினர்களின் உரைகளை தொடர்ந்து நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. அனைத்து விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சுழிபுரம் விக்றோரியன் கழகம் முதலாமிடத்தையும், மூளாய் விக்டோரி அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கதிரவேல் விஜிதரனும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் முருகேசு லோகநாதனும், விக்டோரியா கல்லூரியின் அதிபர் கணேசமூர்த்தி சுலபாமதி ஆகியோருடன், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





