பாட்னா: பீகார் மாநிலத்தில் போலி மருத்துவர் ஒருவர், யூடியூப் பார்த்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலியால் சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சரண் மாவட்டம் மவுராவில் போலி மருத்துவர் அஜித்குமார் பூரி, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர், அஜித் குமார் பூரியின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோரிடம், ஆபரேஷன் பற்றி எதுவும் தெரிவிக்காமல், அஜித் குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுவனை உடனடியாக பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு போலி மருத்துவர் அஜித்குமார் பூரி அறிவுறுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, போலி மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், அந்த மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போதுமான அனுபவம் இல்லை என்றும் யூடியூப் பார்த்து சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த அஜித்குமார் பூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். போலி மருத்துவரைத் தேடி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.





