அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதை கூறி கொண்டுள்ள நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(21) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் இம்முறை போட்டியிடுகின்ற மிக பலமான கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதே வேளை இத் தேர்தலானது அதிகூடிய பாராளுமன்ற வேட்பாளர்களை கொண்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லுகின்ற ஒரு கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தில் பலமான ஒரு கூட்டணியாக எமது கூட்டணி காணப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது.தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை ரீதியாகவும்,ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடி உள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை முன் நிறுத்தி நாங்கள் வடக்கு கிழக்கில் எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருந்தோம்.மிகக் குறுகிய காலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் எமக்கு வாக்களித்து உள்ளனர்.
அது இந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டிப்பான ஆதரவை தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்.
இந்த தேர்தல் காலத்திலே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இல்லை என்பதை கூறி கொண்டுள்ள அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பனை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இத் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
மக்கள் எங்களுக்கு இரட்டிப்பான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.