இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையில் முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை சீராக இயங்கிவருவதாக சேவையின் நிர்வாக இயக்குநர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
கப்பல் சேவை வழமைப் போன்று முழு கொள்ளளவுடன் வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பமானது. என்றாலும், பின்னர் அச்சேவை இடைநிறுத்தப்பட்டு பின்னர் 2024 ஆண்டு ஒகஸ்ட் 16ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது.
இந்தியா மற்றும் இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் வரும்போது விசாவைப் பெறுகிறார்கள். மேலும் கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை ஒன்லைனில் பதிவு செய்ய முடியும்.
கப்பல் சேவயையை மேலும் மலிவாக்க, நாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கை வழங்குகிறது.
மேலும், கப்பல் ஊடாக இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்காக விதிக்கப்படும் புறப்பாடு வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.