மதிய வேளையில் சாதத்திற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையைக் கொண்ட கூட்டு செய்யுங்கள். இந்த அப்பள கூட்டு புளிக்குழம்புடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். உங்களுக்கு அப்பள கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு – 1/4 கப்
* தண்ணீர் – 1 கப்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு – 2(தோலுரித்துதுண்டுகளாக்கப்பட்டது)
* சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
கூட்டு செய்வதற்கு…
* எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
* கடுகு – 1/2
* உளுத்தம் பருப்பு – 1/2
* சீரகம் – 1/2
* வரமிளகாய் – 3
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை – 1 கொத்து
* உப்பு – சிறிது
* சுடுதண்ணீர் – 3/4 கப்
* பொரித்த அப்பளம் – 5-7
செய்முறை: * முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த கடலைப்பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, பருப்பை மட்டும் சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்து விட வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சாம்பார் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் 3/4 கப் சுடுநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை நொறுக்கி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான அப்பள கூட்டு தயார்.











