இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கிராமத்துப் பின்னணியில் குடும்ப உணர்வுகள் மற்றும் மருத்துவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், ரசிகர்களிடையே இன்றளவும் நீங்காத இடம் பிடித்துப் பேசப்பட்டு வருகிறது.
படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு திரைப்படம் மக்கள் மனதில் எவ்வளவு காலம் நிலைத்து நிற்கிறது என்பதே அதன் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களின் அளப்பரிய அன்பினாலேயே இத்திரைப்படம் 10 ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் வெங்கட் ஆகியோருக்கும், இப்படத்திற்குத் தங்களின் கலைத்திறனால் உயிர் கொடுத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் உரித்தாக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் மெல்லிசையான பாடல்களும், கதாபாத்திரங்களின் கதையம்சமும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.











