சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இந்தியத் திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் நடிகருமான கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினர்.
சமீபத்தில் நடைபெற்ற சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர் சேரன் தலைமையிலான நிர்வாகிகள், கமல்ஹாசனின் நீண்டகால அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறியும் நோக்கில் இச்சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன், அவர்களை நேரில் வரவழைத்துத் தனது வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
இச்சந்திப்பு குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் சினிமாவில் எண்ணற்ற சிறந்த எழுத்தாளர்கள் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கான திரைக்கதை அமைக்கும் பாதையைச் சீரமைத்துக் கொடுத்த மிக முக்கிய முன்னோடி கமல்ஹாசன்.
அவர் உருவாக்கிய மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா மற்றும் தேவர் மகன் போன்ற படங்கள், கூர்மையான மற்றும் ஆழமான வசனங்களால் இன்றும் காலத்தைக் கடந்து நிற்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களை அன்புடன் வரவேற்று, சங்கத்தின் வருங்கால செயல்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திச் செல்ல ஊக்கமளித்த கமல்ஹாசனின் வழிகாட்டுதல்கள், தங்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் என்றென்றும் நினைவில் நிற்கும் அனுபவத்தையும் அளித்துள்ளதாக நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.











