ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான நிதி முறைகேடு விசாரணையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று செப்டெம்பர் 16ஆம் திகதி அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











