ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரன் (Hebron) நகரில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் கடுமையான ஒடுக்குமுறை மற்றும் வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனர்களை நிரந்தரமாக வெளியேற்றும் புதிய நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹெப்ரன் நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாகத் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹெப்ரன் மாகாணத்தில் மொத்தம் 488 குடும்பங்களைச் சேர்ந்த 3,171 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாகாண ஆளுநர் கலீத் துதின் (Khaled Dudin) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹெப்ரன் நகரின் எல்லைக்குள் மாத்திரம் 3,043 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மேயர் யூசப் அல்-ஜபாரி (Yousef al-Jabari) குறிப்பிட்டுள்ளார்.
இப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன், குறைந்தது 71 பேரைக் கைது செய்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நகரில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டுப் போருக்குப் பிறகு இல்லாத அளவிலான கடுமையான இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்ஹாகு உறுதியளித்திருந்தார்.
தற்போது பாலஸ்தீனர்களின் வீடுகளை இராணுவ முகாம்களாகவும் கள விசாரணை மையங்களாகவும் இஸ்ரேல் படையினர் மாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளை புல்டோசர்கள் மூலம் அழிக்கும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தீவிர வலதுசாரி வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவே இத்தகைய கடுமையான இராணுவ நடவடிக்கைகளை நெட்டன்ஹாகு அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக மேயர் யூசப் அல்-ஜபாரி குற்றம்சாட்டியுள்ளார்.











