நோவா ஸ்கோஷியா மாகாணப் பாடசாலைகளில் கைப்பேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடைமுறை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாட்டின்படி, ஆரம்ப வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கற்பித்தல் நேரத்தில் கைப்பேசிகளை அணைத்து, பார்வைக்குப் படாத வகையில் வைத்திருக்க வேண்டும்.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் முழுப் பாடசாலை நேரத்திலும் கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து பாடசாலைகளே தீர்மானிக்கலாம்.
இந்நிலையில், வகுப்பறைகளில் மாணவர்களின் கவனம் அதிகரித்துள்ளதாகவும், கைப்பேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது கற்றலுக்கு உதவுவதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதிலும், மாணவர்களிடையே விதிகளைப் பின்பற்றச் செய்வதிலும் சவால்கள் காணப்படுவதாக ஆசிரியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்விச் செயற்பாடுகளில் கவனத்தை அதிகரிப்பதுடன், மாணவர்களிடையேயான நேரடி சமூக உறவுகளை மேம்படுத்துவதும் இந்தக் கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.











