அல்பர்ட்டா மாகாணத்தில், அடுத்த கோவிட்-19 தடுப்பூசிக்காக பொதுமக்கள் இப்போது முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தடுப்பூசிக்கான கட்டணம் எவ்வளவு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்பு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசி, இனி பெரும்பாலானவர்களுக்கு கட்டணத்துடன் வழங்கப்படும் என அல்பர்ட்டா மாகாண அரசு அறிவித்துள்ளது.
முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்போர், வீட்டில் பராமரிப்பு பெறும் நோயாளிகள், கடுமையான உடல்நலக் குறைபாடுகளுக்கான உதவித் தொகை பெறுவோர், நோயெதிர்ப்பு சக்தி குறைந்த தனிநபர்கள் முதலான, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.
இலையுதிர்கால தடுப்பூசித் திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது எனவும் அதன் விவரங்கள், தடுப்பூசி அட்டவணை, தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள், மற்றும் கோவிட்-19 தடுப்பூசிக்கான நிர்வாகக் கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் முதன்மை மற்றும் தடுப்பு சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேடிசன் மெக்கீ தெரிவித்துள்ளார்.











