பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமயிலான லிபரல் அரசாங்கத்தின் புதிய இலையுதிர்கால நாடாளுமன்ற அமர்வு தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுள் ஒன்றான ‘மசோதா C-39’ (Bill C-39 – Building Canada Strong Act) தொடர்பான அரசியல் விவாதங்களும் எதிர்ப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் இந்த அமர்வு மிகவும் தீர்மானமிக்கது என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புதிய மசோதா மற்றும் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சுற்றாடல் அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘பில் C-39′ மசோதாவானது, நாட்டின் பெரும்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அனுமதிக்கான கால அவகாசத்தைக் குறைப்பதையும், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை” உருவாக்கி திட்டங்களை விரைவுபடுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன், தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான கூட்டுப் பேரம் பேசுதல் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மசோதா சுற்றாடல் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் என்றும், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளில் அரசாங்கம் தலையிட வழிவகுக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன.
நாடாளுமன்றக் கேள்வி நேரத்தின் போது, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிலீவ்ரே (Pierre Poilievre) பிரதமரின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











