கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு, சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை (UN) தலையிட வேண்டும் என, கனடாவின் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் கியூபெக் பிரிவு (ICJ Canada – Quebec Chapter) முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
கியூபெக்கின் ஆளும் கட்சியான ‘கூட்டணி அவனிர் கியூபெக்’ (CAQ) கொண்டுவந்துள்ள இந்த சட்ட வரைவு, தனிநபர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் கியூபெக் பிரிவின் தலைவரும், மொண்ட்ரியால் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு சட்ட பேராசிரியருமான Stéphane Beaulac, இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வெவ்வேறு சிறப்பு அறிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
பூர்வகுடி மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் இந்த சட்ட வரைவை கியூபெக் அரசு உடனடியாகத் திரும்பப் பெற ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கியூபெக் நீதித்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, மாகாணத்தின் பொதுவான மதிப்புகளான மதச்சார்பின்மை (Secularism), பாலின சமத்துவம், கருக்கலைப்பு உரிமை மற்றும் பிரெஞ்சு மொழியை கியூபெக்கின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனினும், கியூபெக் தேசிய இனத்தின் ‘கூட்டு உரிமை’ என்ற பெயரில், கனடிய அரசியலமைப்பு மற்றும் கியூபெக்கின் சொந்த மனித உரிமை சாசனம் வழங்கியுள்ள தனிநபர் உரிமைகளை இந்த சட்ட வரைவு பலவீனப்படுத்துகிறது என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.











