மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் குற்றச்செயல்கள் இப்போது கனடா எல்லைப் பக்கமாக திசைமாறி அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் (Homeland Security Secretary) மார்க்வெய்ன் முல்லின் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் காரணமாகவே, மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் குற்றச்செயல்கள் திசைமாறியுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, கடந்த ஓராண்டில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் பெண்டானில் (Fentanyl) போன்ற ஆபத்தான போதைப்பொருட்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் மார்க்வெய்ன் முல்லின் எச்சரித்துள்ளார். கடத்தல் கும்பல்கள், தெற்கில் வழி அடைக்கப்படும் போது வடக்கிலுள்ள புதிய பகுதிகளை நோக்கி நகர்வதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும், அமெரிக்காவின் பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் (Terrorist watchlist) உள்ள நபர்கள், கனடா எல்லைப் பகுதியில் “வாரந்தோறும்” அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு முகவரகங்களும் தங்களுக்குள் உளவுத்துறை தகவல்களை (Intelligence sharing) மிக விரைவாகப் பகிர்ந்துகொண்டு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று முல்லின் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.











