இலங்கையில், தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 19,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை நாடளாவிய ரீதியில் 53,159 டெங்கு நோயாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் 25ஆவது வாரம் நிறைவடையும் போது, இலங்கையின் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றுக்கு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாகவே காணப்பட்டது.
எனினும், இந்த ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.











