வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார்.
வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (30.06) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சிசீரிவியுடன் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிசார், குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை இன்று (01.07) கோரியிருந்தனர்.
இதன்போது, பொலிசாரின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய வவுனியா நீதவான் நீதிமன்றம் வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் சு.காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.











