அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க அவர்களின் தலைமையில் இன்று (17) வவுனியாவில் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்பில், ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் மீள் செலுத்த தேவையற்ற உதவித்தொகையின் கீழ், நான்கு ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் இதன்போது கையளிக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கு இணையாக, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இரண்டு குடும்பங்களுக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் திட்டத்திற்கு அமைவாக, பல்வேறு கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையானதொரு வசிப்பிடத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்காக, வவுனியா மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்காக 159 வீடுகளை அமைக்கும் பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக 159 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3000 பேருக்கு தலா 2 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











