2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பணியில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டமைக்காக 10 அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்குத் தன்னலமற்ற சேவை வழங்கியதற்காக 5 அதிகாரிகளுக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல் புலனாய்வுக்கான சிறப்புப் பணிப் பதக்கப் பிரிவில், கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சி.ஜெயஸ்ரீ, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் நா.தமிழரசி, கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் கொ.அழகுராஜ், திருச்சி குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் ந.தனுசியா, கோவை தனி சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் சே.லதா, சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக உதவித் தலைவர் வி.கோமதி, பெரம்பலூர் கைகளத்தூர் ஆய்வாளர் மா.சித்ரா, விழுப்புரம் மேல்மலையனூர் ஆய்வாளர் ரா.வினதா, சிவகங்கை குற்றப் பதிவேட்டுக்கூட ஆய்வாளர் கோ.மகாலெட்சுமி மற்றும் திருநெல்வேலி மேற்கு சரக காவல் துணை ஆணையர் ச.விஜயகுமார் ஆகிய 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கப் பிரிவில், திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் டாக்டர் வி.சசி மோகன், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக மேற்ச் சரக காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் சி.எம்.ஆர்.மணிமொழியன், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொழில்நுட்ப ஆய்வாளர் க.மதன் மோகன் மற்றும் கரூர் நகர காவல் நிலையத் தலைமை காவலர் மு.ரவிக்குமார் ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதுக்குத் தேர்வாகியுள்ள இந்த 15 அதிகாரிகளுக்கும் தலா 8 கிராம் எடையிலான தங்கப் பதக்கமும், ரூ.25,000 ரொக்க வெகுமதியும் வழங்கப்படும் என்றும், இதற்கான விருதுகளை முதலமைச்சர் பிறிதொரு சிறப்பு விழாவில் நேரில் வழங்கி கௌரவிப்பார் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











