யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 14 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது, குறித்த வழக்கானது எவ்வித அடிப்படை முகாந்திரமும் அற்ற நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என 1ஆம், 6ஆம் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, பிரிவு 20இன் கீழ் ஒரு வழக்குத் தொடர வேண்டுமாயின் இரண்டு நபர்களுக்கு இடையில் உறவொன்று இருந்திருக்க வேண்டும். அத்தகைய உறவு இருந்து பின் அந்த உறவு இல்லாமல் போயிருந்து ஒருவருடைய தகவல்களை மற்றையவர் தவறாகப் பயன்படுத்தினால் இத்தகைய வழக்கைத் தாக்கல்செய்ய முடியும்.
ஆனால், வழக்குத் தொடுநரான ரகுராம், தனக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட உறவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதையே அந்தப் பெண்ணும் குறிப்பிட்டுள்ளார். எனவே, 20ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கை அணுக முடியாது என்று சட்டத்தரணி சுவஸ்திகா வாதிட்டார்.
அத்துடன், ஒன்லைன் பயன்பாட்டை நெறிப்படுத்தும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாம் எதிர்மனு தாரருக்கு சமூக வலைத்தளங்கள் எவையும் இல்லை. ஒன்லைன் தொடர்பான பயன்பாட்டில் இல்லாத அந்த நபருக்கு எதிராக எவ்வாறு நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியும்? எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
அதுபோல், 6ஆம் எதிர்மனுதாரரின் சமூக வலைத்தளப் பதிவுக்காகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய பதிவுகளில் பேராசிரியர் ரகுராம் தொடர்பில் எந்தக் கருத்தும் இல்லை. எனவே, பேராசிரியர் ரகுராம் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாத அந்தப் பதிவுகள் தொடர்பில் பேராசிரியர் ரகுராம் வழக்குத் தொடர்ந்ததால், பேராசிரியர் ரகுராம் அவ்வாறு செயற்படுகின்றாரா? எனத் தற்போது எமக்குச் சந்தேகங்கள் ஏற்படுகின்றன என்றும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.
அதனை அடுத்து இருதரப்பின் எழுத்துமூல சமர்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.











