தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கவும் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை.
இதன்காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் விநியோக நிலைமையை மின்வாரியத் தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மின் விநியோகப் பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்ய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்குமாறு களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.











