ஜோர்தானில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு முன்னர், சீன நிறுவனங்களிடமிருந்து ஈரான் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பெற்றதாக வெளியான செய்தி அறிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) ஊடகம் வெளியிட்ட அறிக்கையொன்றில், பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெறவுள்ள சந்திப்பில் இது குறித்துப் பேசுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, ட்ரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, சீனாவினதும் அமெரிக்காவினதும் உளவு நடவடிக்கைகளை அவர் சமமாக ஒப்பீடு செய்து பேசினார்.
“நாங்கள் என்ன செய்கிறோமோ அதையேதான் அவர்களும் செய்கிறார்கள். சீனா எங்கள் மீது உளவு பார்க்கிறது என்று கூறும்போது, நீங்கள் சொல்வது சரிதான், நாங்களும் அவர்கள் மீது உளவு பார்க்கிறோம் என்று நான் கூறுகிறேன்” என எயர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ஊடகவியலாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி அமெரிக்காவில் சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும் வழியில் பேசிய ட்ரம்ப், ஷி ஜின்பிங்குடன் தமக்கு நல்லுறவு இருப்பதாக மீண்டும் சுட்டிக்காட்டினார்.
ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்கிய சீன நிறுவனங்களை அடையாளம் காட்ட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்றும், இதில் பீஜிங்கின் நேரடிப் பங்கு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டவில்லை என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அடிப்படையற்ற சந்தேகங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோ ஜியாகுன் (Guo Jiakun) தெரிவித்துள்ளார்.











