தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடயவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 180 அலுவலர்களுக்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் அலுவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சிறப்பான பணியினை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 20 பேருக்கும் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், சிறைத்துறையில் 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 பேருக்கும் மற்றும் தடயவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும் இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடலில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகருக்கு, அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி “முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட பதக்கங்கள் அனைத்தும் முதலமைச்சரால் பின்னர் நடைபெறும் நிகழ்வொன்றில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











