மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் முன்னெடுத்து வரும் உரிமைப் போராட்டம் 1,500 நாட்களுக்கும் மேலாகியும் எந்தவிதமான தீர்வும் இன்றி தொடர்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில், பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகள் பல்வேறு விஷமிகளாலும், சில சுயநலப் போக்காளர்களாலும் கையாளப்பட்டு மலினப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ‘திபுலபொத்தானை’ என்ற கிராமம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தற்போது பெரியமாதவனைப் பகுதி ‘திபுலபொத்தானை’ என அழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு–மாதவனை பகுதிகள், தற்போது சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, மாடுகளை அங்கு மேயவிடாமல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் இருதரப்பினரையும் ஒரே மேய்ச்சல் தரையைப் பயன்படுத்த அனுமதிப்பது, உண்மையில் பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாகவும் முழுமையாகவும் வெளியேற்றுவதற்கான திட்டமாக அமையக்கூடும் எனவும் தர்மலிங்கம் சுரேஷ் எச்சரித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால், இன்னும் சில வருடங்களில் கால்நடை வளம் முற்றாக அழிந்துபோகும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.











