டொராண்டோ மேயர் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் மேயர் வேட்பாளர் பிராட் பிராட்ஃபோர்ட் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகப் புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலில், வேட்பாளர்களின் தேர்தல் விவாதச் செயல்திறன் மற்றும் ஆதரவாளர்களை வாக்களிக்கத் திரட்டும் திறன் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கலாம் என நிக் நானோஸ் தெரிவித்துள்ளார்.
லயசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, முடிவெடுத்த மற்றும் வாக்களிக்க ஆர்வமுள்ள வாக்காளர்களில் பிராட் பிராட்ஃபோர்ட் 49 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.
தற்போதைய மேயர் ஒலிவியா சௌ 47 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதுடன், மேலும், 3 சதவீதம் பேர் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த இரண்டு புள்ளிகள் வித்தியாசமும் கருத்துக் கணிப்பின் பிழை வரம்பிற்குள் இருப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி புள்ளிவிவர ரீதியாகச் சமநிலையில் இருப்பதாக லயசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வாலண்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட இதே நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், ஒலிவியா சௌ 51 சதவீத ஆதரவுடனும், பிராட் பிராட்ஃபோர்ட் 46 சதவீத ஆதரவுடனும் காணப்பட்டனர்.
புதிய கணக்கெடுப்பில் பிராட்ஃபோர்டின் ஆதரவு மூன்று புள்ளிகள் அதிகரித்துள்ளதுடன், சௌவின் ஆதரவு நான்கு புள்ளிகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பில், ஒலிவியா சௌ 50 சதவீத ஆதரவையும், பிராட் பிராட்ஃபோர்ட் 47 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகளும் கணக்கெடுப்பின் பிழை வரம்பிற்குள் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமைத் தரவு விஞ்ஞானி நிக் நானோஸ் குறிப்பிட்டுள்ளார்.
லயசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம், அக்டோபர் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் டொராண்டோவைச் சேர்ந்த 1,000 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதில் பிழை வரம்பு பிளஸ் அல்லது மைனஸ் 3.1 சதவீதப் புள்ளிகளாகும்.
அதேவேளை, நானோஸ் ரிசர்ச் நிறுவனம் அக்டோபர் 15 முதல் 18ஆம் திகதி வரை 762 பேரிடம் தொலைபேசி மற்றும் இணையவழியில் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதில் பிழை வரம்பு பிளஸ் அல்லது மைனஸ் 3.6 சதவீதப் புள்ளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நானோஸ் நிறுவனத்தின் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 16 சதவீதம் பேர் தங்களது வாக்கை யாருக்கு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், டொராண்டோ மேயர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே நெருக்கமான ஆதரவு நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











